ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து சென்னை சென்ற பேருந்தில், ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கப் பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அந்த ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 27 பயணிகள் இருந்தனர்.
ஆலங்குடி பாலம் அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது, தேர்தல் பறக்கும் படையினர் திடீரென அதனை வழிமறித்து சோதனை செய்தனர்.
இதில், பேருந்தில் ஒரு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ 218 கிராம் எடை கொண்ட தங்கப் பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து பயணிகளிடம், தேர்தல் அலுவலரான வேதாரண்யம் தாசில்தார் வசந்தி விசாரணை நடத்தினார்.
இதனை தொடர்ந்து, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த அம்ஜத் கான் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வேதாரண்யத்தில் மிகப் பெரிய அளவாக, இந்த தங்கப் பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரூ.25 லட்சம் பறிமுதல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய பல்வேறு சோதனைகளில் 18 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்ப்பட்டது.
கேரளாவின் பாலக்காட்டில் இருந்து கோவை வந்த நபரிடம் இருந்து 3 லட்சத்து 77 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 67 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும், சந்தைப்பேட்டை என்ற இடத்தில் 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்களையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோயம்புத்தூரில் இருந்து திருவையாறுக்கு எடுத்துச் செல்லப்பட்ட 625 கிரைண்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, திருவாரூரில் தனியார் நிதி நிறுவனம் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. இதனை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் விதிமுறை காரணமாக, உரிமம் பெற்ற 200 துப்பாக்கிகளை, அதன் உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment