அருணாசலப்பிரதேச சட்டமன்றத்திற்கான தேர்தல், அம்மாநில மக்களவைத் தேர்தலுடன் இணைத்து, ஏப்ரல் 9-ம் தேதியே நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அருணாசலப்பிரதேசத்தில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அந்த நாளில் தேர்தல் நடத்தப்படும் என நேற்றிரவு தேர்தல் ஆணையம் அறிவித்தது.
சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து சட்டமன்றத்துக்கான தேர்தலை நடத்தவேண்டும் என்று அருணாசலப்பிரதேச அமைச்சரவை அளித்த பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் நிர்பைய் சிங் கடந்த 6ம் தேதி சட்டமன்றத்தை கலைத்தார்.
இதைத்தொடர்ந்து அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தியது.
அதைத் தொடர்ந்து நேற்றிரவு தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தேர்தலுக்கான அறிவிக்கை வரும் 15ம் தேதி வெளியிடப்படும்.
தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் 22ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
அருணாசலப்பிரதேசத்தில் உள்ள இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதுவு நடைபெறும் நாளான ஏப்ரல் 9ம் தேதி மாநில சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவும் நடைபெறும்.
0 comments:
Post a Comment