மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை கூடுதலாக இரண்டு மணி நேரம் அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கி, மே 12 ஆம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மொத்தம் 9 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து வேண்டுகோள் வந்ததையடுத்து, வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதாவது, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. ஆனால், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி 4 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்துவிடும்.
இத்தகவலை தெரிவித்த தேர்தல் ஆணையம், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளது. இந்த தேர்தல், வெயில் காலத்தில் நடைபெறுவதால், வாக்களார்கள் மாலை நேரத்தில் வெயில் தணிந்த பிறகே வாக்களிக்க வர வாய்ப்புள்ளது.
மேலும், அண்மைக் காலமாக தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்தில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டு, வாக்குப்பதிவு நேரம் இரண்டு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment