வீரப்பன் கூட்டாளிகள் உள்ளிட்ட 15 பேரின் தண்டனை குறைப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வீரப்பன் கூட்டாளிகள் சைமன், பிலவேந்திரன், மீசை மாதையன், ஞானப்பிரகாசம் உள்ளிட்ட 15 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த ஜனவரி 21 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களின் கருணை மனுக்களை நீண்ட காலம் நிலுவையில் வைத்திருந்ததன் காரணமாக, இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
இதை எதிர்த்து, அண்மையில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது. அதில், குற்றவாளிகளின் தன்மையை கருத்தில் கொண்டு தண்டனை குறைப்பு செய்திருக்க வேண்டும் எனவும், அவர்களின் கருணை மனுக்களை மீண்டும் பரிசீலிக்க குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் பரிந்துரை மட்டுமே செய்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இதுபோன்ற அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கக் கூடாது என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி பி.சதாசிவம், ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகளின் அறையில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி தள்ளுபடி செய்தனர்.
இந்த உத்தரவு, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. அதாவது, ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை குறைப்பு பெற்றுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
0 comments:
Post a Comment