நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் திமுக, தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போது தமிழகத்திற்கு செய்யப்பட்ட நன்மைகள் மற்றும் 100 தலைப்புகளில் தேர்தல் வாக்குறுதிகள், அதில் இடம்பெற்றுள்ளன.
இடஒதுக்கீடு தொடர்பான மண்டல் கமிஷன் அறிக்கையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். நாடு முழுவதும் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தைப் பின்பற்றி நாடு முழுவதும் சமத்துவபுரங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற திமுக பாடுபடும். இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணைக்கு, முன் முயற்சிகளை எடுப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்த திமுக உறுதியளித்துள்ளது.
இஸ்ரோவின் 2வது ராக்கெட் ஏவுதளத்தை தமிழகத்தில் நிறுவவும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குளச்சல் துறைமுகத்தையும், தூத்துக்குடி, சேலம் விமான நிலையங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நதிகளை இணைக்கவும், தென் மண்டல இயற்கை எரிவாயு பகிர்மான கட்டமைப்பை ஏற்படுத்தவும் திமுக உறுதிமொழி அளித்துள்ளது.
மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை அறிவிக்கவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கவும் மத்திய அரசை வலியுறுத்துவோம். மத்திய அரசு மின் திட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, அந்தந்த மாநிலங்களுக்கே முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவிகிதத்தை மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தனி நபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு, 6 லட்ச ரூபாயாக உயர்த்தப்படும். தூக்குத் தண்டனையை அறவே ஒழிக்கவும், கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் பாடுபட திமுக உறுதியளித்துள்ளது.
காவிரிப் பாசன பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை நிறுத்தவும், முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தர உறுதியளித்துள்ளது.
0 comments:
Post a Comment