மலேசிய விமானத்தில் காணாமல் போன பயணிகளின் உறவினர்கள் பொறுமை காக்கும்படி மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை 5 இந்தியர்கள் உட்பட 239 பேரை ஏற்றிக் கொண்டு கோலாலம்பூரிலிருந்து சீனாவிற்கு சென்ற மலேசிய விமானம், இலக்கை அடையும் முன்னர் காணாமல் போனது. விமானத்தையும், அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது குறித்து மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக், இது மிகவும் எதிர்பாராத நிகழ்வு எனவும், விமானத்தை கண்டுபிடிக்க தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே சீனா மற்றும் மலேசியா அதிகாரிகள் தேடுதல் பணிகள் தொடர்பான கூட்டத்தை நடத்தினர்.
இந்தியா உள்ளிட்ட 10 நாடுகள் இணைந்து விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. விமானம் காணாமல் போய் 5 நாட்களாகும் நிலையில், பயணிகளின் உறவினர்கள் அனைவரும் கோலாலம்பூர் வந்தடைந்த வண்ணம் உள்ளனர்.
முன்னதாக விமானமானது, கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்னர், மீண்டும் மலேசியா நோக்கியே தனது பாதையை திருப்பியதாக தகவல்கள் வெளியானது. ரேடாரில் பதிவான தகவல்களை ஆராய்ந்ததில் இது தெரிய வந்துள்ளது. எனினும் ஓடுபாதையின் மாற்றம் குறித்து விமானிகள் ஏன் தகவல் அளிக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மலேசிய விமானத்தில் பயணம் செய்த இந்தியர்களைப் பற்றி மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என, விமானத்தில் பயணம் செய்த சந்திரிகா சர்மா என்பவரின் கணவர் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சந்திரிகா சர்மாவின் கணவர் நரேந்திரன், தமிழக அரசின் வருவாய்த்துறை சார்பில், சில தகவல்கள் கேட்கப்பட்டதாகத் தெரிவித்தார். விமானம் காணாமல் போய் 5 நாட்கள் முடிந்துள்ள நிலையில், விமானம் என்ன ஆனது என்பது குறித்தும், அதில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்பது பற்றியும் இது வரை எந்தத் தகவலும் கிடைக்காமல் இருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment